மத்திய கிழக்கு என்பது மேற்கு ஆசியாவையும் வட ஆபிரிக்காவையும் சேர்ந்த 21 நாடுகளை (பாலஸ்தீன்உட்பட ) கொண்ட ஒரு பிரதேசம். இந்த நாடுகளில் வாழும் மக்களிடையே பெரும்பான்மையானோர் ஒரே மொழி, மதம், கலை மற்றும் கலாச்சாரம் என்பவற்றை கொண்டிருந்த போதும் அவர்களிடையே நீண்ட காலமாக சில உள் முரண்பாடுகளும் தொடருகின்றன. இதில் முக்கியமாக மத அடையாள முரண்பாடான சியா-சுன்னி பிரச்சினைகளோடு பல ஆயிரம் ஆண்டாண்டு காலமாக தொடரும் குல வேறுபாடுகளும் (Tribes) ஆகும்.
இதே போல் , இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியிலும் சில பொதுவான குணயியல்புகள் காணப்படுகின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் அல்லது அவர்களின் குடும்பங்கள் ; ஒன்றில் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் அல்லது மக்கள் ஆதரவுடன் கூடிய இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சிகட்டிலேரியவர்கள். எனினும் முரண்நகையான விடயம் என்னவென்றால், ஒரு சில நாடுகளை தவிர்ந்த (உ +ம்: சவூதி அரேபியா , கட்டார் ) ஏனைய அனைத்து தலைவர்களுமே அந்தந்த நாடுகளில் உள்ள சிறுபான்மை இனம்/குலம்/மதத்தை சார்ந்தவர்கள். எனினும் இவர்கள் ஆட்சியை கைப்பற்றும் போது பொதுவாக எல்லா மக்களாலும் ஏற்று கொள்ளபட்ட தலைவர்களாக இருந்த போதும், பின்னால் அவ்வந்த உள்முரண்பாடுகள் தலைதூக்கியமை ஒருவகையில் இவர்கள் கடுபோக்குவாத சர்வாதிகாரர்களாக மாறுவதற்கு காரணமாக அமைந்து இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
உஸ்மானிய (ஒட்டமன் ) சம்பிராஜ்யத்தில் பெரும்பாலான அரபு நாடுகள் ஒரே கொடியின் கீழ் இருந்தபோதும், 1900 களிற்கு பிறகு, அதாவது உஸ்மானிய சாம்பிராஜ்யத்தின் இறுதி கட்டங்களின் போது, காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தினால் உருவாகிய அரபு தேசியவாதியவாதம் மீது பெரும்பாலான அரபு தலைவர்கள் ஈர்க்கப்பட்டதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. 1967 ஆம் ஆண்டு அரபு -இஸ்ரேல் யுத்தத்தின் போது ஏற்பட்ட தோல்வியின் பின், அரபு தேசியவாதம் மேலும் தீவிரமடைந்து தேச எல்லைகள் அற்ற ஓர் அகண்ட அரபு பேரசு (A Great Arab Emphare) உருவாக்கப்பட வேண்டும் என்ற கமால் அப்துல் நாசரின் தலைமையில் இந்த தலைவர்கள் அணிதிரண்டதும் ஒருவகையில் தத்தமது நாடுகளில் தமக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தின் மூலம் ஆட்சி கவிழ்ப்புகள் அல்லது புரட்சிகள் ஏற்படுவதை தவிர்த்து, தாம் ஒரு பொது எதிரிக்கான தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதும் , உள்-முரண்பாடுகளுக்கு அப்பால் மக்கள் தம் பின்னால் அணி திரள வேண்டும் என்பதேயாகும்.
நான் மேற்கூறிய விடயங்கள் பிராந்தியத்திற்கு பொதுவானவையாக இருந்தாலும், கடாபியையும் லிபியாவையும் பொருத்தமட்டில் இந்த விடயங்கள் மிகச்சரியாக பொருந்தக்கூடியதான பின்னணியாக உள்ளது.
யார் இந்த கடாபி ?
உமர் முக்தாரின் வழிகாட்டலின் கீழ் இத்தாலியின் காலனித்துவத்திற்கு எதிராக போராடிய ஓர் வீடற்ற ஏழை போராளியின் மகனான கடாபி( தந்தையின் நினைவுகளாலேயே தான் தற்பொழுதும் கூடாரத்தில் தங்கும் வழக்கத்தை கொண்டிருப்பதாக கடாபி கூறிக்கொள்வார்), தனது 27 வது வயதில் அன்றைய லிபிய மன்னர் இத்ரீசுக்கு எதிரான இரத்திமில்லா புரட்சியின் மூலம் மக்கள் தலைவனானார். இங்கே நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால், 1969 இல் கடாபியின் தலைமையில் மன்னர் இத்ரீசுக்கு எதிரான போராட்டத்தின் களமாக இருந்த பென்காசி (Benghazi ) நகரமே, 2011 இல் கடாபியின் கட்டுபாட்டை இழந்த முதல் மற்றும் அவருக்கு எதிரான போராட்டத்தின் முதன்மை நகராகவும் விழங்கியது.
சுன்னி முஸ்லிம்களை பெருன்பான்மையாக கொண்ட லிபிய தேசம் 140 குலங்களை கொண்டது. பெரும்பாலும் ஒவ்வொரு நகரங்களும் வெவ்வேறு குலங்களுக்கு உரியதாயினும் 30 குலங்கள் அரசியல் ரீதியாக பலமானவையாகும். இதில் கடாபி, kaddhafha எனும் மிகவும் சிறுபான்மையான குலத்தை சார்ந்தவர். எனினும் லிபியாவில் warfalla எனும் குலமே பெரும்பான்மையானது மாத்திரம் அல்லாது இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் பலமானது. லிபியாவில் குலங்களுக்குஇடையிலான மோதல்கள் ஒன்றும் புதியவை அல்ல. கடாபியின் ஆரம்ப காலங்களில் நாம் எல்லோரும் அரபுக்கள் நமக்கு இடையில் குல வேறுபாடுகள் தேவையில்லை என்று போதித்தாலும் பிற்காலங்களில் தனது குலத்தை சேர்த்தவர்களுக்கு உயர் பதவிகளில் முக்கியத்துவம் அளித்ததும் தமக்கு சார்பான ஏனைய குலங்களை தம்மோடு இணைத்து செயல்பட்டதும் warfalla போன்ற பெரும்பான்மையான குலங்களை சார்ந்தவகளது வெறுப்பை கூட்டியது.
எகிப்து மற்றும் துனீசியா போலல்லாது, லிபியா பெருமளவு எண்ணை வளத்தை கொண்ட நாடு. லிபியாவின் சமூக மற்றும் பொருளாதார சுட்டெண்ணை பொறுத்த மட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுவதுடன் உலகின் கடன் அற்ற ஒருசில நாடுகளில் லிபியாவும் ஒன்று. எகிப்து மற்றும் துனீசியாவில் அரசியல் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பாக வறுமை மற்றும் வேலையில்லா பிரச்சினை போன்றவையும் மக்கள் எழுச்சிக்குரிய காரணமாக இருக்க, லிபியாவில் கடாபியின் பித்தலாட்டங்களை விகிலீக்ஸ் தோலுரித்து காட்டியதும் ,குல வேறுபாடுகளும் முக்கிய காரணமாக இருந்தது.
கடாபியின் முதல் 10 ஆண்டுகள், லிபியாவில் பொற்காலம் என்று சொல்லப்படும் அளவு மிகச்சிறப்பான மக்கள் நலன் சார்பான ஆட்சியாகவே இருந்தது. எண்ணை கம்பனிகள் லிபியாவின் எண்ணையை உறிஞ்சிவிட்டு அரசாங்கத்திற்கு வீசும் சில்லறை தீனார்களை தடுத்து நிறுத்தி, ஒன்று நீங்கள் மூன்றில் இரண்டு பங்குகளை அரசாங்கத்திற்கு தர வேண்டும் அல்லது லிபியாவை விட்டு வெளியேறனும் என்ற அவரின் அதிரடி நடவடிக்கை, இஸ்ரேலுக்கு எதிரான ஒரு பொது முகாமை அமைக்க பாடுபட்டமை, வீடற்றோருக்குரிய வட்டியில்லா கடன் சலுகை மற்றும் சமூக, கல்வி, சுகாதார விடயங்களில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் என்பன கடாபியை லிபியர்கள் மத்தியில் ஒரு கதாநாயக அந்தஸ்திற்கு உயர்த்தியது யதார்த்தம்தான்.
எனினும் காலப்போக்கில் அவரால் கொண்டுவரப்பட்ட "பச்சை புத்தகம் (The Green Book )" மூலமான சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், போலிஸ்/இராணுவ அராஜகம், ஒருதலைபச்சமான நீதித்துறை, அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஈவிரக்கமற்ற மரண தண்டனை, குடும்ப ஆதிக்கம் என்பன நாட்டிற்குள் அவருக்கு எதிரான அதிருப்தி அலையை தோற்றுவித்தது. மறுபக்கம் லிபிய எண்ணை வருவாயை நினைத்தபடி அடையமுடியாமை, இஸ்ரேலுக்கு எதிரான கடாபியின் கடுமையான நிலைப்பாடு, லொக்கர்பி குண்டு விவகாரம், பேரழிவுதரும் ஆயுத உற்பத்தி என்பன மேற்கு நாடுகள் மத்தியில் அவருக்கு எதிர் மறையான தோற்றத்தையும் உருவாக்கின.
நடுநிலையாக நோக்குமிடத்து சில விஷயங்களில் கடாபி ஹீரோவாகவும் சிலவற்றில் கோமாளியாகவுமே எனக்கு தோன்றுகிறார்.
ஹீரோவாக;
- இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாட்டில் கடைசிவரை விட்டுகொடுக்காமல் இருந்தது,
- அகன்ற அரபு தேசம் ஒன்றின் தேவையை மிக நீண்ட நாட்களாக தனது வெளிவிவகார கொள்கையாக கொண்டமை, இது எடுபடாமல் போகவே
- ஆபிரிக்க ஒன்றியத்தை (African Union ) உருவாக்கியது மாத்திரமல்லாது நெல்சன் மண்டேலாவின் போராட்டம் உட்பட காலனித்துவத்திற்கு எதிரான பல ஆபிரிக்க சிறுபான்மை இனங்களின் போராட்டங்களுக்கு உதவியது,
- ஆபிரிக்காவின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்குரிய உதவிகளை மேற்கு நாடுகளை போல வெறும் பேச்சில் மாத்திரம் இன்றி செயலில் காட்டியது,
- எண்ணை கொம்பனிகளுக்கு அடிபணியாமல் எண்ணை வருவாயை பெற்று கொண்டது .
- பெற்றோடாலர் சித்தார்ந்ததை தகர்க்கும், The Return of Gold Dinar என்ற மசகு எண்ணையை டாலர்களுக்கு இல்லாமல், தங்கத்தில் விற்கும் கொள்கையை முன்மொழிந்தது மாத்திரம் அல்லாமல், அதற்குரிய கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியது.
- கடனற்ற நாடாக லிபியாவை வைத்திருந்தது
கோமாளியாக;
- தனது மெய்பாதுகாவலர்களாக கன்னிப் பெண்களை வைத்து கொண்டிருந்தது,
- பொஸ்னிய யுத்தத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்த செர்பிய தலைவன் மிலசொவிச்சிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து,
- இஸ்ரேலுடன் யாசர் அரபாத் சமாதான ஒப்பந்தம் செய்ய, அதில் சம்பந்தப்படாத அப்பாவி பாலஸ்தீனர்களை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றியது,
- உலகில் உள்ள எல்லா சர்வாதிகாரிகளுடன் நட்பை பேணிக்கொண்டு ,வேண்டும் என்றே அவர்களின் செயல்களை நியாயப்படுத்தி ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியது.
- ஆரம்பத்தில் அரபு தேசியவாதம் பேசிய கடாபி பின்னாட்களில் ஆபிரிக்க தேசியவாதம் பேச முனைந்தது. United States of Africa (USA ) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அடம் பிடித்தது
- தனது அரசியல் எதிரிகளை எப்போதும் "எலிகள்" என கூறும் கடாபி, இறுதியில் எலியைப்போல வீதியோர கழிவுக்குழியில் இருந்து பிடிபட்டது.
லிபியப்புரட்சி
துனிசியாவில் இரு வாரங்களுக்குள்ளேயே எல்லாமே முடிந்து போனதால், பென் அலியின் வெளியேற்றத்தின் பின்பே அதாவது வெற்றியின் பின்பே ஜெஸ்மின் புரட்சி என பெயரிடப்பட்டது. எனினும், எகிப்தில் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கும் வரை இது ஒரு பிராந்திய ரீதியான புரட்சியாக மாறும் என யாரும் நினைக்கவில்லை. ஏனெனில் துனிசியாவை விட பென் அலியை விட எகிப்தும் முபாரக்கும் பிரபலமானது மட்டுமல்ல பலமானதும் கூட. முபாரக் மத்திய கிழக்கில் மாத்திரம் இல்லாது மேற்குலக நாடுகளுக்கும் ,ஏன் இஸ்ரேலுக்கும் செல்லபிள்ளை. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அதிகூடிய வெளிநாட்டு உதவியாக அமெரிக்காவிடம் இருந்து பெரும் நாடு எகிப்து ஆகும்.இந்த வகையில் முபாரக்கின் ஆட்டம் முடிவடைய போவதை உணர்ந்த பின்பே ஏனைய அரபு தலைவர்களுக்கு கிலி பிடித்தது. மேலும் தத்தமது நாட்டு சர்வாதிகாரிகளையும் விரட்டலாம் என மக்களும் உறுதியாக நினைக்க தலைப்பட்டனர். ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள்-முரண்பாடுகள் வெளிவரத்துவங்கின. உண்மையில் எகிப்தில் சில ஆயிரக்கணக்கான மக்கள் புரட்சியின் பொது கொல்லப்பட்டும் இருந்தார்கள். எனினும் ஒரு மாதத்திற்குள் முபாரக் பதவி துறந்தது, லிபியர்கள் மத்தியிலும் புரட்சி எண்ணம் முளைவிடுவதற்கு காரணமாகியது.
ஏற்கனவே நான் கூறியபடி, குல வேறுபாடுகள் உள்ள லிபியாவில் warfalla மக்கள் அதிகம் உள்ள Benghazi யில் முபாரக் பதவி துறந்து வெறும் 3 நாட்களில் ஆரம்பமாகியது கடாபிக்கு எதிரான எதிர்ப்பு ஆர்பாட்டங்கள். எதிர்பார்த்தது போல கடாபி இராணுவத்தை அனுப்பி போராட்டத்தை நசுக்க நினைக்க முதல் நாளிலேயே 14 பேர் கொல்லப்பட, போராட்டம் மேலும் தீவிரமடைந்து முதல் வாரத்திற்குள்ளாகவே Benghazi நகரம் கடாபியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது. எனினும் அதற்கு கொடுக்கப்பட்ட விலை ஓர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்.
தொடரும் ..

