Friday, November 29, 2013

முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்

உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம் உலகத்தினால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவைகளில் பல பின்னர் மறைக்கப்பட்டதுடன் அதை காப்பி பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.  

  1. 14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டு இடையன், தனது ஆடுகள் ஒரு குறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்தெழுச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது கோப்பி (Coffee).  இது எதியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டது. அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது. பெயர்கூட அரபியின் கவ்வா துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் காப்பே (caffe) யாகி ஆங்கிலத்தில் கோப்பி (Coffee) யாகியது.
  2. உண்மையில் ஒரு உருவத்தை பார்க்கும் வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும். 10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில் விம்பமாக தோன்றுவதை அவதானித்தார். அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிரியதாகிற போது, விம்பங்களின் தரம்     அதிகரிப்பதை கண்டுபிடித்தார். அதுவே அவர் முதலாவது கமராவை கண்டுபிடிக்ககாரணமாகியது (Qamara என்ற அரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்)
  3. செஸ் என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள். பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.
  4. ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியிலாளர் மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 852 ஆம் ஆண்டு பரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வளம் வந்தார். எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார். அந்த நேரம் அவருக்கு வயது 70. இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுதூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
    பக்தாத் நகரில் இருக்கும் இப்னு பிர்னாசின் நினைவுத்தூபி 
  5. சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணையையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சவர்க்காரத்தை எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களே இன்றைய ஷாம்பூ (shampoo) வையும் கண்டுபிடித்தனர்.
  6. Crankshaft  எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைக்கும் இயந்திரத்தை அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது. இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (piston) மற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.
    crankshaft
  7. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் முன்னோடியாவார். இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 இற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனித குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார். இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமைய செய்யதல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
  8. காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறையை உலகிற்கு 634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.
  9. தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேயே தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.
  10. மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.
  11. அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆகும். இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா. அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.  
  12. சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்
  13. 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர். அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை  வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது.
  14. கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியனை உலகம் ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் சுற்றளவு 40,253.4 km என்று எழுதியும் வைத்திருந்தார். (40,075.16 Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)
  15. அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்
குறிப்பு:
  • இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன.
  • இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பக்தாத் மீதான மொங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியது. அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்துதருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழிமாற்றவதற்கு மட்டும் 4 வருடங்கள் சென்றது. அதன் பின்னர் original நூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன.
  • அதைப்போல அப்பாசியர்களின் காலம் முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பக்தாத் மொங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் புத்தகங்கள் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர். புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
  • இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும். அதை பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்



Tuesday, November 26, 2013

ஈரானின் அணு ஒப்பந்தமும் இஸ்ரேலின் மிரட்டலும்

ஜெனிவாவில் நடந்து முடிந்த ஈரானின் அணு சம்பந்தமான ஒப்பந்தம் பிராந்தியத்தின் வெவ்வேறு நாடுகளிலும் பல்வேறு வகையான ஆதரவு-எதிர் அலைகளை உருவாக்கியுள்ளது. சில அரபு நாடுகள் நீண்ட மௌனத்தின் பின்னர் எச்சரிக்கையோடு இந்த ஒப்பந்த்தத்தை வரவேற்றுள்ளபோதும் இஸ்ரேல் மாத்திரம் கடும்தொனியிலான எதிர்ப்பை காட்டியுள்ளது. “இதுவொன்றும் வரலாற்று ரீதியிலான ஒப்பந்தம் இல்லை, மாறாக வரலாற்றுத் தவறு (Historical mistake). எனவே இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான தன்னிச்சையாக இராணுவ நடவடிக்கையை எடுக்கவும் தயங்காது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மிரட்டியிருக்கிறார். அவர் குறிப்பிட்டபடி ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேலினால் தற்போது மேற்கொள்ளமுடியுமா?

இஸ்ரேல் ஈரானின் அணு உலைகளை நிர்மூலம் செய்யவேண்டுமாயின் ஒன்றில் விமானத்தாக்குதல்கள் அல்லது ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளவேண்டும். இதில் இஸ்ரேலின் ஜெரிக்கோ 3 என்ற ஏவுகணை ஈரானின் இலக்குகளை அடையக்௯டியது. எனினும் ஈரானின் ஏவுகணை எதிப்பு வலுவும் (Surface to Air Anti-Missile capability), ஏவுகணைகள் சிறிய துல்லியமான இலக்குகளை 100% அடையமுடியாத தன்மையுடையது என்பதாலும் இஸ்ரேல் விமானத்தாக்குதல்களையே தேர்ந்தெடுக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறு விமானத்தாக்குதல்களை தேர்ந்தெடுக்கும் போது இஸ்ரேல் எதிர்கொள்ளவேண்டிய சவால்களை பார்ப்போம். 

சவால் 1

இஸ்ரேலில் இருந்து புறப்படும் யுத்தவிமானங்கள் ஈரானை அடைவதற்கான வழிகள். இதற்கு மூன்று சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.

1. சிரியா மற்றும் ஈராக்கின் வான்பரப்பு ஊடாக செல்லுதல். இஸ்ரேலின் விமான தொழில்நுட்பங்களோடு ஒப்பிடுகையில் ஈராக்கின் விமான எதிர்ப்புக்கள் பூச்சியம். எனினும் சிரியாவின் விமான எதிர்ப்புக்கள் ஓரளவு பலம் வாய்ந்தவை. இதற்கும் மேலதிகமாக இந்த இரு நாடுகளும் தற்போது ஈரானின் நெருங்கிய நட்பு நாடுகள். ஆகக்குறைந்தது தமது ராடாரில் இஸ்ரேலின் யுத்த விமானங்கள் பறப்பதை அவதானித்த உடனே ஈரானுக்கு தகவல்களை அனுப்புவதன் மூலம் ஈரானின் விமான எதிப்புகளை உசார்படுத்தலாம் என்பதால் இந்த வழியை இஸ்ரேல் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.  

2. சிரிய- துருக்கி எல்லைகள் ஊடாக செல்லுதல். இதற்கு துருக்கியின் ஒப்புதல் அவசியம். அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை.

3. சவுதி அரேபியா ஊடான வழி. ஏற்கனவே சவுதியின் ஒப்புதல் இதற்கு கிடைத்திருந்தாலும் இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. முதலாவது ஏற்கனவே ஒப்புதல் சம்மந்தமான செய்தியின் பின்னர் சவூதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்புகள் காரணமாக இஸ்ரேலின் விமானங்களுக்கு வான்பரப்பு திறக்கப்பட்டால் அது மிகவும் இரகசியமாகவே பேணப்படல்வேண்டும். இரண்டு, இந்த பாதையூடாக ஈரானின் அணுஉலைகளை அடைவதற்கு ஈரானின் எல்லைகளை கடந்து நீண்டதூரம் பயணிக்கவேண்டும்.

இஸ்ரேலிய விமானங்கள் பயணிக்கக்கூடிய பாதைகளின் வரைபடம் 
எவ்வாறு பயணித்தாலும் இஸ்ரேலில் இருந்து புறப்படும் விமானங்கள் ஒருவழியாக(one way) ஆகக்குறைந்தது 1500Km பயணிக்கவேண்டும். மீண்டும் தமது நாட்டை வந்தடைய அவை 3000Km பறந்திருக்க வேண்டும்.

சவால் 2

எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தமது அணு உற்பத்தியை பாதுகாப்பதற்காக ஈரான் தனது அணு உற்பத்தி நிலையங்களை ஒரே இடத்தில் வைக்காமல் பல இடங்களில் பகுதி பகுதியாக பிரித்து செயல்படுத்துகிறது. இதில் அராக், நதான்ஸ் மற்றும் இஸ்பஹான் உலைகள் முக்கியமானவை. இஸ்ரேலை பொருத்தமட்டில் தமது விமானத்தாக்குதல்கள் அதிர்ச்சி தரக்௯டியதாகவும் குறிப்பிட்ட எல்லா உலைகளுக்கும் ஒரே நேரத்தில் பாரியசேதம் விளைவிக்கவேண்டும் என்றால் இந்த தாக்குதல் திட்டத்திற்கு பல விமானங்களை ஈடுபடுத்தவேண்டும் . ஈரானின் அணுசெறிவாக்கல் நிலத்துக்கு மிகவும் அடியில் வைத்து  பாதுகாக்கப்படுவதால் அதனை தகர்ப்பதற்கு ஆப்கானில் அமெரிக்கா பயன்படுத்திய GBU- 28 வகை பங்கர் பஸ்டர் (Bunker buster) குண்டுகளே வீசப்படவேண்டும். இதனை கொண்டுசெல்ல F-15i அல்லது    F-16i ரகவிமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும். இந்த குண்டுகளும் விமானங்களும் இஸ்ரேலிடம் போதியளவில் இருந்தாலும், நீண்ட பயணத்தூரத்தை முழுவதுமாகவும் இடையூறு இன்றியும் இந்த விமானங்கள் அடையவேண்டுமானால் யுத்தவிமானங்களுக்கு பயணவழியில் எரிபொருள் நிரப்பியாகவேண்டும். இதற்கு tanker  எனப்படும் ஆகாயத்தில் வைத்தே எரிபொருள்நிரப்பும்  விமானங்கள் வேண்டும். இந்தரக விமானங்கள் 10 க்கும் குறைவாகவே அவர்களிடம் இருக்கின்றது. இது இரண்டு அல்லது மூன்று விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மாத்திரமே போதுமானது.

சவால் 3

ஈரானின் விமான எதிர்ப்பு தொழில்நுட்பம் பிராந்தியத்தின் மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் பலமடங்கு வலுவானது. இதற்காக கடந்த 20 வருடங்களாக பல பில்லியன் டாலர்களை செலவிட்டிருக்கிறார்கள். சமீபத்திய ரஷ்ய S300 தொழில்நுட்பமும் கிடைத்திருப்பதால் இது இன்னும் வலுவானதாக மாறியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேலின் விமானங்கள் ஈரானின் எல்லையில் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். உலகின் எல்லா விமானப்படைகளையும் விட தமது விமானப்படையின் திறன் மேலானது என்றும் வரலாற்றில் இதுவரை தமது எந்தவொரு விமானியும் எதிரி நாட்டு எல்லைக்குள் பிடிபட்டது கிடையாது  என மார்தட்டும் இஸ்ரேலின் விமானங்கள் சுடப்பட்டு, விமானிகள் ஈரானின் எல்லையில் பிடிபட்டால்,அது இஸ்ரேல் தமது மக்களுக்குள் கட்டிவைத்திருக்கும் கனவுத்தேசத்தின் முதல் சரிவாக மாறும். கைது செய்யப்பட்ட இஸ்ரேலின் விமானிகள் உலகம் முழுக்க இருக்கும் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை சற்று கற்பனை செய்துபாருங்களேன்.

சவால் 4

சர்வதேச நியதிகளின் படி ஒரு  நாடு தாக்கப்பட்ட நிலையில் எதிர் தாக்குதல் செய்வது குற்றமாகாது. ஈரான் தனது கையிருப்பில் உள்ள பல ஆயிரக்கணக்கான பேலஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும் அதேவேளை ஹிஸ்புல்லா மூலமும் தாக்குதல்முனை ஒன்றையும் திறந்துவிடலாம். இது ஏற்கனவே தட்டுதடுமாறும் இஸ்ரேலின் பொருளாதாரத்தை நெருக்குவதோடு அரசியல் ரீதியில் நெதன்யாஹு அரசாங்கம் மக்களின் நெருக்குவாரங்களையும் சம்பாதிக்கலாம்.  

ஒருவேளை ஈரான் நேரடியாக எதிர்தாக்குதல் நடத்தாவிட்டாலும் ௯ட யுரேனியம் செரிவூட்டலின் அளவைக்குறைப்பதற்கு இணங்கிய நிலையில் தன் மீதான தாக்குதல்கள் தனக்கு சார்பான உலக அனுதாபத்தையும் எதிர்காலத்தில் அணு ஆயுத உற்பத்தி செய்வதற்கான தமது நியாயப்பாடுகளை உலக அரங்கில் ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளில் ஈரான் இறங்கலாம்.


எனவே இவ்வாறான சாத்தியப்பாடுகளையும் அதன் எதிர்விளைவுகளையும் பார்க்கும்போது இஸ்ரேலின் மிரட்டல்கள் வெறும் பூச்சாண்டியே அன்று வேறில்லை.  

Friday, November 22, 2013

மாற்றமடையும் மத்தியகிழக்கு இராஜதந்திர உறவுகள்

நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் என்பது மாற்றமடைய௯டிய ஒன்றாகும். நண்பன் எதிரியானதும் எதிரி நண்பனானதும் உலக சரித்திரத்தில் உதாரணங்கள் ஏராளம். அந்த வகையில் அரபு புரட்சியின் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுவரும் அசாதாரண மாற்றங்கள் சிலருக்கு ஆச்சரியம் தரக்௯டியதாக இருக்கலாம். பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் உள்ள பங்காளர்களின் இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்ப்போம்.


“சவூதி-ஈரான்” என்ற மையப்புள்ளியை சுற்றியே இந்த மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 1979 வரை (ஆயதுல்லா கொமைனியின் ஆரம்பம் வரை) சவுதியும் ஈரானும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் மிகவும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை கொண்ட நாடுகள். இந்த உறவுகள் இராணுவ – பாதுகாப்பு- மற்றும் பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தது. சியா- சுன்னி என்ற மார்க்க ரீதியிலான வேறுபாடுகள் அரசியல் ரீதியில் அனுகப்பட்டிருக்கவில்லை. அன்று அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியனுக்கு எதிராக இரு நாடுகளையும் தமது முதலாளித்துவ தேவைக்காக பாவித்துக்கொண்டன. கொமையினியின் வருகை நிலைமையை தலைகீழாக புரட்டிபோட்டது. கொமைனியின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கை, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலுக்கு காரணமாகியது.  அன்றுதொட்டு கடந்த 4 தசாப்தகாலமாக இருநாடுகளும் எதிர் அணியில் இருப்பது தெரிந்தவிஷயம். எனினும் இந்த இரு நாடுகளும் “இஸ்ரேல் எதிர்ப்பு” என்ற விடயத்தில் மாத்திரம் ஒருமித்த நிலையில் இருந்து வந்தன. யார் பாலஸ்தினுக்கு விடிவு ஏற்படுத்தி கொடுக்கின்றாரோ அவர் முழு முஸ்லிம் உலகத்தினதும் அசைக்கமுடியாத ஹிரோவாக போற்றப்படுவார் என்ற அரசியலும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

எனினும் தற்போது மாற்றமேற்பட்டுவரும் அரசியல் சமன்பாட்டில் பாலஸ்தீனுக்கு  பதிலாக சிரியா பிரதியீடு செய்யப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதானால் பாலஸ்தினின் சுதந்திரம் முஸ்லிம் உலகின் தற்போதைய முக்கிய தேவையல்ல, சிரியாவின் வெற்றியே இன்றைய முக்கிய பிரச்சினை என்ற தோற்றப்பாட்டை சில நாடுகள் வேண்டும் என்றே ஏற்படுத்த முனைவதை காணலாம். அதாவது சியோனிசம் முஸ்லிம்களின் எதிரியல்ல சியாயிசமே எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. அரசியல் ரீதியிலான சிக்கல்களையும் தமது பரிவாரங்களின் சொத்து சுகங்களையும் தற்காத்துக்கொள்வதற்கு மத அல்லது இன சாயம் பூசப்படுவது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கைதானே.

இதன் அடிப்படையில் வளைகுடா (Gulf Cooperation Council) நாடுகள் அதிலும் குறிப்பாக சவூதி அரேபியா இஸ்ரேலுடன் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை வெளிப்படையாகவே ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்கின்றது. ஒபாமா அரசு ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவின் மீது போர் தொடுக்காதது இஸ்ரேல் சவூதி போன்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த இரு நாடுகளையும் பொறுத்த மட்டில் ஜெனிவாவில் நடைபெறும் ஈரானின் அணு பரம்பல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தது எரியும் நெருப்பில் எண்ணையை வார்த்தது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இங்கு கவனிக்கவேண்டிய விடயம், அமெரிக்காவை பொருத்தமட்டில், எப்போதும் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராக செயல்படாது, செயல்படவும் முடியாது, ஏனெனில் செனட் சபையில் பெரும்பாலான அங்கத்தவர்கள் பலம்பொருந்திய சியோனிச கட்டமைப்பின் பக்கட்டுக்குள் இருக்கிறார்கள். அவர்கள்தான் அமெரிக்காவின் அரச இயந்திரத்தை கையில் வைத்திருக்கிறார்கள். தேவையேற்பட்டால் சமீபத்தில் நடந்ததைபோல அரச இயந்திரத்தை முடக்கி (shut down) விடுவார்கள்.

இங்கு சவுதியின் நிலைதான் பரிதாபம். தனக்கு சார்பாக அமெரிக்க அரச இயந்திரத்திற்குள் பகிரங்கமாக ஆதரவு திரட்டக்௯டிய எந்தவொரு பொறிமுறையும்   இல்லாதநிலையில்,  அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று தனக்கு கிடைத்த ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் பதவியையும் உதறித்தள்ளியது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றது. சவுதியின் குறைவடைந்துவரும் எண்ணை வளத்தைவிட ஈரானில் தேங்கி இருக்கும் எண்ணை மற்றும் கனிய வளங்களே ஈரான் சார்பான தனது கடுமையான நிலைப்பாட்டை அமேரிக்கா தளர்த்துவதற்குரிய முக்கிய காரணம்.  முதலாளித்துவ அமெரிக்காவை பொருத்தமட்டில் அவர்களின் ௯ட்டல் கழித்தல்களில் சரியாகவே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு சியாக்களின் ஈரானோ அல்லது சுன்னிகளின் சவுதியோ முக்கியமல்ல. யாரிடம் சரக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம். சரக்கு தீர்ந்துவிட்டால் கறிவேப்பிலைதான். இதுதான் பாகிஸ்தான்- இந்திய விடயத்தில் பாகிஸ்தானுக்கும்  நடந்தது. ஒரு காலத்தில் ஒரு முஸ்லிம் நாடு வல்லரசாக முடியும் என்றால் அது பாகிஸ்தான்தான் என்ற நிலையில் இருந்த நாட்டை இன்று குப்பை தொட்டியாக மாற்றியிருக்கிறார்கள். அதுவேதான் சதாமுக்கும் நடந்தது. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு நீண்ட காலத்துக்கு தமது ஆட்சியை தொடரமுடியாது என்ற இந்த உண்மை சவூதி ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்போகிறோம் என்று இளவரசர் பந்தர் சுல்தானை அவசரமாக  ரஷ்யாவுக்கு அனுப்பியும் பருப்பு வேகவில்லை. ஏனெனில் ரஷ்யாவோடு ஒரு நிலைக்கு மேல் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று போனால் கடாபி மற்றும் சத்தாமின் நிலைதான் அப்துல்லாவுக்கும். வேண்டும் என்றால் 30 வருடங்களுக்கு முன் சீனாவிடம் இருந்து வாங்கிய “East Wind” போன்ற ஏவுகணைகளை வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதிக்கும்.அமெரிக்காவை முற்றிலும் பகைத்துக்கொள்ளாமல் அதேநேரம் ஈரானுக்கு சார்பான அமெரிக்க நிலைப்பாட்டுக்கு சிகப்பு கொடியை பிராந்தியத்தில் நிலைநாட்டவேண்டும் என்றால் சவுதிக்கு இருக்கும் ஒரே தெரிவு, இஸ்ரேல்தான். இஸ்ரேலுடன் கைகோர்க்கும் போது தனக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை அமேரிக்கா எடுக்க முடியாது.  அதேவேளை எதிரிக்கு எதிரி நண்பன் என்றவகையில் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும். மேலும் சிரியாவின் விடயத்திலும் இரு நாடுகளும் ஒத்த கருத்தில் இருப்பதால், அது இன்னும் சார்பானதாக மாறும். அதற்கமைய ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு தமது வான்பரப்பையும் தேவையேற்பட்டால் தமது விமான தளங்களையும் இஸ்ரேல் பாவித்துக்கொள்ளலாம் என்ற உடன்பாடும்  எதிர் காலங்களில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புடன் தமது உளவுபிரிவும் சேர்ந்து இயங்குவதற்குரிய உறுதிமொழியும் சவூதி அரசாங்கம் கொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.  


இந்த போக்கு பிராந்தியத்தில் தொடரும் என்றால் முதலில் காவுகொள்ளப்படப்போவது சவூதி அரேபியர்களோ அல்லது ஈரானியர்களோ இல்லை, பலஸ்தீனியர்களும் அவர்களின் விடிவுக்காக காத்திருக்கும் முஸ்லிம் உலகுமேயாகும்.  

Thursday, October 31, 2013

சிரியா யார் வலையில் (பாகம் 03)


சிரிய யுத்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல வகையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் மனித குலத்துக்கு எதிரான போரியல் குற்றங்களையும் புரிந்திருக்கிறார்கள். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வெளிப்படையாக மீறப்பட்ட சம்பவங்கள் பல நூறுகளைகளையும் தாண்டியுள்ளது. இதில் முக்கியமானது அப்பாவிகளை மீதான இரசாயன தாக்குதல்கள். பல இடங்களில் இரசாயன தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டாலும் ஆகஸ்ட் 21 தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் ஆயிரக்கணக்கில் தூங்கிய நிலையில்  இறந்து கிடந்தமை உலகத்தையே ஒரு கணம் உசுப்பிவிட்டது. இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகின் நாலபாகங்களில் இருந்தும் ஒலிக்கத்தொடங்கியது.  

சூத்திரதாரிகள் யாராயிருக்கலாம் என்பதற்கு நான்கு சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்
1.       அசாத் அரசாங்கம்- சிரிய இராணுவத்திடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயம் இல்லை. சிரியா அரசு தன்னிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கவில்லை என்று வெளிப்படையாக மறுத்ததும் இல்லை மறுக்கவும் முடியாது. மேலும் இரசாயன ஆயுதத்தை சாதாரண ஆயுதங்கள் போல நினைத்தவுடன் எல்லோராலும் கையாளவும்முடியாது. அதற்கு சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் உட்பட அதற்குரிய கருவிகள் அவசியம். இதற்குரிய ஆற்றல் சிரிய இராணுவத்திடம் நிச்சியமாக இருக்கின்றது. அதனால் சிரிய இராணுவம் இந்த தாக்குதல்களை செய்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.  எனினும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஐ.நாவின் இரசாயன பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் இருக்கும் போதே இந்த தாக்குதல் நடந்துள்ளமை அசாத் அரசு தவிர்ந்த வேற யாராவது செய்திருக்ககூடும்  என்ற சந்தேகத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ஏனெனில் ஐ.நாவின் பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் நிற்கும்போது அதுவும் டமாஸ்கஸுக்கு மிக அருகாமையிலேயே தாக்குதல் நடத்தும் அளவுக்கு அசாத் முட்டாளாக இருக்க முடியாது. அப்படி என்றால் வேறு யார் செய்திருக்ககூடும்?
2.       அசாத் சிரிய ஜனாதிபதியாக இருந்தாலும் போர் ஆரம்பித்த பின்னர் அவர் எந்தளவு சிரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அவரின் இராணுவத்தின் முக்கிய பிரிவுகள் அவரின் சகோதரர் மாகிர் அசாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இவர் பசர் அல் அசாத்தை விட கடும்போக்காளர். யுத்தம் மூலமாக போராளிகளை முற்றாக ஒழிக்கலாம் என்று பிடிவாதமாக இருப்பவர். நான் ஏற்கனவே எனது முன்னைய பதிவில் சொன்னதை போல FSA யுடன் சமாதான போச்சுவர்த்தைகளுக்கான சில சமிக்ஜைகள் இருந்ததும் அசாத்தின் சில நெகிழ்வு போக்குகளும் மாகிர் அசாத்துக்கு பிடிக்கவில்லை. ஜனாதிபதி அசாத்துக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்காமல் இருப்பதற்காக ஏனைய கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவ்வாறான ஒரு தாக்குதலை இவர் செய்திருக்ககூடும்.   
3.       போராளிக்குழுக்கள் – இராணுவ சமநிலை அசாத்துக்கு சார்பாக மாறிகொண்டிருக்கும் நிலையில் சர்வதேச தாக்குதல்முனை ஒன்றை திறப்பதன் மூலமாக களச்சமநிலையில் மாற்றம் ஒன்றை அவசரமாக ஏற்படுத்துவதற்காக இவர்கள் செய்திருக்ககூடும் என்ற கருத்தும் இருக்கின்றது.
4.       வெளிநாட்டு உளவு அமைப்புக்கள்- சிரியாவின் வெவ்வேறு பகுதிகளின் கட்டுபாடுகளும் பலரின் கைகளில் இருக்கும் நிலையில் பல வெளிநாட்டு உளவு அமைப்புக்களின் பிரசன்னங்களுக்கும் பஞ்சம் இல்லை. இதில் முக்கியமாக இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் சிரியாவில் பெருமளவில் நிற்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இதுவரை சிரியா நிலப்பரப்பு மொசாட்டுக்கு தடை வலயமாகவே இருந்தது. தற்போது சிரியா  ஒரு திறந்தவெளி சந்தையாக இருப்பதால் அங்குள்ள உட்கட்டுமானங்கள் உட்பட பல தகவல்களுக்காக அவர்கள் பல முகங்களோடு சிரியாவில் நடுமாடும் நிலையில் சர்வதேச தாக்குதல் முனை ஒன்றை திறப்பதற்கான சர்வதேச அபிப்பிராயத்தை  (global opinion) கட்டியெழுப்புவதற்காக அவர்களே இந்த தாக்குதலை செய்திருக்கக்கூடிய சாத்தியங்களும் இல்லாமலிலை.

இந்த கோழைத்தனமான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மற்று கருத்துக்கு இடமில்லை.

இதற்கு மேலதிகமாக தற்போது நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதாவது FSA தவிர்ந்த ஏனைய 14  போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய இராணுவம் (Islamic Army) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இவர்களின் நோக்கம் இஸ்லாமிய கிலாபத்தை தோற்றுவிப்பது என்று பொதுவாக குறிப்பிட்டாலும் அரசியல் ரீதியாக அதனை எவ்வாறு அடையப்போகிறார்கள் என்பது தற்போதைய நிலையில் தெளிவில்லாமல் இருக்கின்றது.

இவர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மறுமுனையில் அரசியல் ரீதியாக சிரியா பிரச்சினைக்கு முற்றிப்புள்ளி வைக்கும் சர்வதேச முனைப்புகளும் ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நவம்பர் மாதத்தில் ஜெனிவாவில் சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.  அசாத் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டாலும், SNC இன்னும் உடன்படவில்லை போல தெரிகின்றது. அசாத் ஆட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவதில்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. சிரிய இராணுவத்தை தோற்கடிக்கும் வலு FSAயிடமிருந்து குறைந்து வரும் நிலையில் இவர்களின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்,    சவுதி அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் பின்னடிக்கிறார்கள் என்பதுவே சர்வதேச அவதானிகளின் கருத்து. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சவூதி அரசாங்கம் தனக்கு முதன் முதலாக கிடைத்த ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கான சுழற்றிமுறையிலான  பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற குண்டை தூக்கி போட்டதை குறிப்பிடலாம். இந்த பதவி தற்செயலாக கிடைத்த ஒன்றல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். அன்றுதொட்டு தமது அதிகாரிகளுக்கு மொழிப்பயிற்சி உட்பட இராஜதந்திர பயிற்சிகள் அனைத்தையும் வழங்கி தயார் நிலையில் இருந்த சவூதி அரசாங்கம், திடீரென பின்வாங்கியமைக்கு முக்கிய காரணம் சிரியாவில் விடயத்தில் தான் முற்றுமுழுதாக நம்பிய அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து சர்வதேச தாக்குதல்களை தள்ளிப்போட்டதும், தற்போது அசாத்தை அகற்றாமல் நழுவல் போக்கை கடைபிடிப்பதே காரணமாகும். பேச வேண்டிய மேடையை (ஐ.நா பாதுகாப்பு சபை) உதறித்தள்ளிவிட்டு தனி ஒரு வல்லரசை மட்டும் நம்பும் சவூதியின் தீர்மானமானது முட்டாள்தனம் என்றால் அது மிகையாகாது. (தேவையேற்பட்டால் இதனை பற்றி வேறு ஒருபதிவில் விரிவாக பார்ப்போம்).

இந்த பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்தம் என்ற பெயரில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை திரைமறைவில் வல்லரசுகள் ஆரம்பித்திருப்பதை போல தெரிகிறது. அதுதான் சிரியாவை இரண்டு நாடுகளாக துண்டாடும் வேலைத்திட்டம்.

வலை விரியும் .....

முன்னைய பதிவுகள் 

சிரியா யார் வலையில் (பாகம் 02)
சிரியா யார் வலையில் (பாகம் 01)


Monday, October 21, 2013

சிரியா யார் வலையில் ? (பாகம் 02)

ஆரம்ப ஆர்ப்பாட்டங்களில் சாதாரண பொதுமக்களே கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆயுதம் ஏந்துவேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இவர்களின் கோரிக்கை ஒன்றே, அது ஜனநாயக ரீதியான அரசாங்கம்இவர்களின் கோரிக்கையை சற்றும் பரிசீலனை செய்ய தயாரில்லாத அசாத்இராணுவத்தாங்கிகள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும்  அவர்களுக்கு பதில் அளித்தமை இராணுவத்துக்குள்ளும் அரசுக்குள்ளும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எதிர்த்து இராணுவத்தில் இருந்த பெரும்பாலான சுன்னி இராணுவ அதிகாரிகள், வீரர்கள்  இராணுவத்தை விட்டும் தமது ஆயுதங்கள் சகிதம் வெளியேறத்தொடங்கினார்கள். இவர்கள் Free Syrian Army (FSA) என்ற ஆசாத்தின் இராணுவத்துக்கு எதிரான ஆயுத அமைப்பை உருவாகினார்கள். ஆரம்பத்தில் FSA யிடம் சிறிய ரக ஆயுதங்களே இருந்தபோதும் சில காவலரன்கள், முகாம்களை தாக்கி அதன்மூலம் பெறப்பட்ட   ஆயுதங்களே இராணுவத்துக்கு எதிராக ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன. முன்னாள் இராணுவ வீரர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் இணையத்தொடங்கினார்கள்.

மறுபுறம் அரசாங்கத்தை விட்டு வெளியேரிய முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகார்களும் சிரிய தேசிய பேரவை Syrian National Council (SNC)  என்ற அரசியல் அமைப்பை (Political Organization) உருவாகினார்கள்எனினும் இந்த  அரசியல்இராணுவ கட்டமைப்புக்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்குள் யார் தலைமைபொறுப்பை ஏற்பது, எவ்வாறு கூட்டிணைவது என்பது தொடர்பில் பாரிய கருத்துவேறுபாடுகள் இருந்தது. எனினும் ஒருவாராக கடந்த டிசம்பரில் (2012) இரு தரப்பினரும் இணைந்து National Coalition for Syrian Revolutionary and Opposition Forces என்ற அமைப்பை உருவாகினார்கள்எனினும் இந்த அமைப்பு எந்தளவுக்கு தற்போதைய புரட்சியில் தமது செல்வாக்கை வைத்திருக்கின்றது என்பது தற்போது  பெரும்கேள்விக்குறியாக இருக்கின்றது.

அதற்குரிய முக்கிய காரணம், ஆயுத மோதலின் வெற்றி தோல்வியே புரட்சியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக  இருக்கும் நிலையில், FSA இன் இராணுவ பலத்தை மிஞ்சும் அளவுக்கு , இராணுவ மேலாதிக்கம் செலுத்திவரும் அல் கைதா போராளிகள். இதில் முக்கிய அமைப்பு ஜப்ஹத்- அல்- நுஸ்ரா எனும் அமைப்பாகும். இவர்கள் ஈராக்கில் தொடந்து இயங்கிவரும் Islamic State of Iraq and Levant/Sham (ISIS) எனும் அல்-கைதா அமைப்பின் கிளையாக செயல்படுவதாக அறியப்பட்டாலும் இரு அமைப்புக்களும் இருவேறு அமைப்புக்கள் என்பதே உண்மையாகும்.  அல்-நுஸ்ரா மற்றும் ISIS அமைப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு போராளிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றதுஇதிலும் ISIS யில்தான் பெரும்பாலான வெளிநாட்டு போராளிகள் இருக்கிறார்கள். இவர்களில் பெருபாலானோர் வளைகுடா நாடுகளை சார்ந்தவர்கள், இவர்களுக்கு  மேலதிகமாக செச்னியா, பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் சில ஐரோப்பிய/அமெரிக்கர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் நுஸ்ரா மற்றும் ISIS போராளிகள் இல்லாமல் அசாத்துக்கு எதிரான முக்கிய வெற்றிகள் பெறமுடியாது என்ற நிலைமையே இன்று காணப்படுகிறது. இவர்கள் ஆரம்பத்தில் FSA யுடன் இணைந்து அசாத்துக்கு எதிராக போரிட்டாலும், பின்னர் FSA இற்குள் மேலோங்கிய SNC யின் கொள்கை பிரச்சினைகள்கள் காரணமாக தனித்து இயங்குவது மாத்திரமின்றி FSA யிற்கும் நுஸ்ராவுக்கும் இடையிலேயே அயுத மோதல்கள் ஏற்பட்டு FSA யின் இராணுவத்தளபதி கமால் ஹமீமியை போட்டுத்தள்ளும்  அளவுக்கு பிரிவினை முற்றியிருக்கிறது. இது ஒருவகையில் அசாதுக்கு சாதகமாக மாறி இருக்கின்றது. போராளிகள் பெரும்பாலும் கெரில்லா போர் உத்தியையே கையாள்வதால், அசாத்தும் லெபனானின் ஹிஸ்புள்ளாவின் நேரடி உதவியை சிலவேளைகளிலும், அசாத்தின் நிழல் இராணுவமாக இயங்கும் சாபிஹா என்ற முற்றுமுழுவதும் அலவி பிரிவிரை கொண்ட துணை இராணுவத்தையும் களத்தில் இறக்கியுள்ளார். அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிற்கு மேலதிகமாக ௨௦ இற்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் களத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் அஹ்றார்-அல்-ஷாம், புர்கான், சிரிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்றவை பெயர் சொல்லகூடியவையாகும். இதற்கு மேலதிகமாக சிரியாவின் வடக்கில் குர்திஸ்தான் போராளி அமைப்புக்கள் சில அசாத் அரசாங்கத்திற்கு எதிராகவும் சில குழுக்கள் அவருக்கு சார்பாகவும் போராடுகிறார்கள்.     

நாம் விளங்கவேண்டிய சிக்கலான விடயம் இதுதான்.  

இந்த சிரிய உள்நாட்டு போர் அசாத்தின் அரசாங்கத்திற்கும் FSA என்ற போராளிக்குழுவுக்குமிடையாக இருந்தாலும், களநிலவரங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியமாகிறது.

 FSA இன் நோக்கம் அசாத் இல்லாத சிரியாவின் ஜனநாயக அரசு. இதனை அடைவதற்கு அசாத்தின் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய வலு FSA யிடம் இல்லை. ஆனால் அதனை அடைவதற்குரிய ஓரளவு பலம் அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிடம்தான் இருக்கிறது.  அசாத்துக்கு எதிரான தாக்குதல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பொது எதிரியாக அசாத் இருந்தாலும்,  FSA யும்  அல்-நுஸ்ரா மற்றும் ISIS தற்போது ஒரு அணியில் இல்லை. அல் கைதாவின் கெரில்லா போரியல் முறையை எதிர்ப்பதற்கு சாபிஹாவும் சில சந்தர்ப்பங்களில் கெரில்லா போரியலில் பல அனுபவங்களை கொண்ட ஹிஸ்புள்ளாவும் களம் இறக்கப்பட்டுள்ளது.

FSA தற்போதைய நிலையில் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவது என்பதை விட தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சண்டையிட வேண்டியிருக்கிறது. ஒரு புறம் அசாத்தின் இராணுவம், மறுபுறம் அல் நுஸ்ரா போன்ற சகபோராளிக்குழுக்கள் ,இன்னொரு புறம் ஹிஸ்புல்லா போன்ற  எதிரிப்போராளிக்குழுக்கள் என்று மும்முனைகளில் போராடவேண்டிய நிலையில் FSA இருக்கிறது.  இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் லெபனானிய எல்லையிலுள்ள குசைர் என்ற நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்ததை குறிப்பிடலாம். இதில் அரம்பத்தில் FSA இன் கை ஓங்கியிருந்த போதும், களத்தில் ஹிஸ்புல்லாவின் திடீர் பிரவேசம்   வெற்றி தோல்வியை தீர்மானித்தது. இதற்கு மேலதிகமாக தற்போதைய சிரியாவின் ஒவ்வொரு நகரமும் அல்லது நகரின் தனிப்பட்ட பகுதிகள் வேறுபட்ட குழுக்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. உதாரணமாக மிகப்பெரிய நகரான அலேப்போவின் மத்திய நகரம் இராணுவ கட்டுபாட்டில் இருக்கும்  அதேவேளை ஒவ்வொரு புறநகர் பகுதியும் வெவ்வேறு போராளிகளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    (சிரியாவின் தற்போதைய கட்டுப்பாட்டு நிலவரத்தை காட்டும் படம்) 


இவ்வாறான இக்கட்டான நிலையில் FSA இன் முன் சில தெரிவுகளே இருக்கின்றன. ஒன்று இறுதிவரை தனித்து போராடி இராணுவத்தை வெற்றி கொள்வது. அது தற்போதைய நிலையில் சாத்தியபடாத ஒன்றாகும். அடுத்தது சக போராளிக்குழுக்களுடன் இணைந்து போராடுவது. கொள்கை பிரச்சினைகள் பெரியளவில் மேலோங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. அடுத்த தெரிவு அசாத் அரசுடன் சமரசர பேச்சுவார்த்தை.

தி கார்டியன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தியை கசிய விட்டிருந்தது, FSA இன் இரண்டு முக்கிய அதிகாரிகள் கடந்த ஒகஸ்ட் மாதம் நடுப்பகுதியளவில் அசாத் அரசுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு டமாஸ்கஸ் நகருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர் என்ற செய்தியாகும். இந்த செய்தி தற்போதுதான் கசிந்திருக்கின்றது. இதன் உண்மைத்தன்மை எவ்வாறு இருந்தபோதிலும் இதன் பின்னணியில் மற்றொரு சம்பவம் தொடர்பு படுகிறது. அது ஒகஸ்ட் 21 இல் டமாஸ்கஸ் நகருக்கு அருகாமையில் நடந்த கோழைத்தனமான இரசாயன குண்டுவிச்சு தாக்குதலாகும். 

வலை விரியும் ..