Friday, October 11, 2013

சிரியா - யார் வலையில் ? (பாகம் 01)

உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன? இந்த போரின் உண்மை நோக்கம் என்ன ? யாருக்காக இந்த பேரழிவுதரும் போர் தொடர்கிறது??

இந்த கேள்விகள் எம் மத்தியில் எழுந்தாலும், இதற்குரிய சரியான விடையளிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்லை. ஏனெனில் சிரியாவில் நடக்கும் போருக்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பரிமாணத்துக்கும் வெவ்வேறு விடைகள் இருக்கின்றன. அதைப்போல ஒவ்வொரு பரிமாணத்துக்குள்ளும் அதன் பிரதிபலனை அனுபவிப்பதற்கும் வெவ்வேறு பங்குதாரர்கள் இருக்கின்றார்கள்.

அசாத்துக்கும் அவருக்கு எதிரான போராளிகளுக்கும் இடையிலான மோதல் என்று ஒற்றை வரியில் சிரிய யுத்தத்தை சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவருக்கும் சார்பான - எதிரான என்றபாரிய பரிமாத்தையும் அதன் பங்குதார்களையும் இந்த கட்டுரை நடுநிலையாக நின்று பார்க்கவிளைகிறது

அரபு வசந்தம் தூனிசியாவில் ஆரம்பித்து எகிப்து லிபியா என்று பல்வேறு அரபு நாடுகளை பலதசாப்த காலமாக தமது சர்வாதிகார பிடியில் வைத்திருந்த ஆட்சியாளர்களை மிகவும் குருகிய காலத்தில் தூக்கி எறிய ஆரம்பித்தவேளை, சிரிய மக்களும் அசாத் குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணியது வாஸ்தவம்தான். ஆனால் தூனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியார்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்டதும் மத்திய கிழக்கின்  ஏனைய ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டனர். என்ன விலைகொடுத்தேனும், எந்த பேயுடன் சேர்ந்தாவது தமது ஆட்சியை பாதுகாப்பது என்பதில் உறுதிபூண்டனர். நான்கு தசாப்தகால குடும்ப ஆட்சியை வைத்திருக்கும் அசாத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. புரட்சி ஏற்பட்டால் எவ்வாறு தன்னைபாதுகாக்கவேண்டும் என்பதை முடிவெடுக்க‌  இவருக்கு ஓரளவு கால அவகாசம் இருந்தது. ஏனெனில் எகிப்தில் முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்பே சிரியாவில் மக்கள் வீதிக்கு வரத்தொடங்கினர்.

சிரிய புரட்சியின் ஆரம்பத்தில் இன மத வேறுபாடுகள் இன்றே ஆரம்பிக்கபட்டது. ஆர்ப்பாட்டங்களில் சுன்னிகள், சியாக்கள், குர்திஸ் இனத்தவர் மற்றும் கிரிஸ்தவ மக்கள் என எல்லோரும் கலந்துகொண்டனர். அவர்களின் ஒரே கோஷம் அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுற்று, ஜனநாயக தேர்தல் மூலமான அரசாங்கம் வேண்டும் என்பதேசிரியா மக்கள் தமது புரட்சியை ஆரம்பித்தவுடன்தனது திட்டப்படி அதை முலையிலேயே கிள்ள நினைத்த அசாத் , தனது முழு இராணுவப்பலத்தையும் ஆயுதமில்லா அப்பாவிகள் மீது பிரயோகித்தார். ஆட்சி மாற்றம் கோரிய மக்கள் வயது, பால் வித்தியாசம் இன்றி கொல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

அசாத் குடும்பம் அலவிகள் என்ற சியா பிரிவினராகும். இவர்கள் சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாக (60%) கொண்ட சிரியாவின் மக்கள்தொகையில் 12% வீதமாகும்டெரா என்ற நகரத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தாலும், ஹோம் மற்றும் ஹாமா என்ற சுன்னிகள் பெரும்பான்மையாகவுள்ளநகரங்களே புரட்சியின் மையப்புள்ளியாக இருந்தது. ஹாமா என்ற நகரம் அசாத் குடும்பத்திற்கு ஒரு கருப்பு புள்ளியாகும். இந்த நகரத்தை சார்ந்த மக்களும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் ஹபிஸ் அல்-அசாதுக்கு (தற்போதைய அதிபரின் தந்தை) எதிரான புரட்சியை  1982 அம் ஆண்டு ஆரம்பித்தபோது, சிரிய இராணுவம் முழு நகரையே தரைமட்டமாக்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரை பறித்தெடுத்த வடு இன்னும் அந்த மக்களிடம் இருந்து ஆறவில்லை. இதை ஹாமா படுகொலை (Hama Massacre) என்று இன்றும் நினைவுகூறுவர்.  

தற்போதைய புரட்சிக்கு வருவோம், இந்த டெரா, ஹோம் மற்றும் ஹாமா நகரங்களை  சுற்றி வளைத்த அசாத்தின் இராணுவம் ஈவு இரக்கமின்றி அப்பாவிகளை வேட்டையாடத்தொடங்கியது. மறுபுறம், அரபு புரட்சியின் தூதுவன் என்றழைக்கப்பட்ட சமூக ஊடங்களான பேஸ்புக், ட்விட்டர் உட்பட பெரும்பாலான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடங்கள் செய்திகளை வெளியிடாதவாறு முடக்கப்பட்டன. அரச ஊடகங்கள்  நாட்டில் பிரச்சினையே இல்லையென்றமாதிரியான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.

இந்த நகரங்கள் முற்றுகையிடப்படு இருக்கும் போதே சிரியாவின் மிகப்பெரிய நகரான அலெப்போவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன‌.  இந்த நகரமும் சுன்னிகளை பெரும்பான்மையாக கொண்ட நகரமே. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தவிரும்பிய அசாத்  தனது அரசு ஊடகங்களை  பாவித்து சுன்னி முஸ்லிம்களே பிரச்சினையை ஏற்படுத்த முனைவதாக பிரச்சாரங்கள் முடக்கிவிட்டார். ஆர்ப்பாட்டகாரர்களை பயங்கரவாதிகள் என்றார்இதுவொரு சர்வதேச சதி என்றார். தனது ஆட்சியை விரும்பாத மற்றும் புரட்சிக்கு ஆதரவான சியாக்களும், கிரிஸ்தவர்களும் மீண்டும் தன்பக்கம் வருவதற்கு இந்த உத்தி ஓரளவு உதவினாலும்,  இதுவே மிகப்பெரிய பிழையாகவும் மாறியது. ஏனெனில் ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் அமெரிக்கர்கள் தமக்கு எதிரான ஈராக்கியர்களின் ஒற்றுமையான போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் தமது வழமையான பிரித்தாளும் (Divide and rule) தந்திரத்தை பாவித்து  சுன்னி-சியா என்ற வகுப்புவாத பிரிவினையை தூண்டிவிட்டதும், அது கூர்ப்படைந்து இன்றைய ஈராக்கின் போரழிவுக்கு காரணமாக இருக்கின்றது என்ற தெரிந்தும் அதிலிருந்து படிப்பினை பெறாமல் சிரியாவிலும் அதே ஆயுதத்தையே அசாத் தூக்கியது அவரின் முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment