Thursday, October 31, 2013

சிரியா யார் வலையில் (பாகம் 03)


சிரிய யுத்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல வகையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் மனித குலத்துக்கு எதிரான போரியல் குற்றங்களையும் புரிந்திருக்கிறார்கள். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வெளிப்படையாக மீறப்பட்ட சம்பவங்கள் பல நூறுகளைகளையும் தாண்டியுள்ளது. இதில் முக்கியமானது அப்பாவிகளை மீதான இரசாயன தாக்குதல்கள். பல இடங்களில் இரசாயன தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டாலும் ஆகஸ்ட் 21 தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் ஆயிரக்கணக்கில் தூங்கிய நிலையில்  இறந்து கிடந்தமை உலகத்தையே ஒரு கணம் உசுப்பிவிட்டது. இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகின் நாலபாகங்களில் இருந்தும் ஒலிக்கத்தொடங்கியது.  

சூத்திரதாரிகள் யாராயிருக்கலாம் என்பதற்கு நான்கு சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்
1.       அசாத் அரசாங்கம்- சிரிய இராணுவத்திடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயம் இல்லை. சிரியா அரசு தன்னிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கவில்லை என்று வெளிப்படையாக மறுத்ததும் இல்லை மறுக்கவும் முடியாது. மேலும் இரசாயன ஆயுதத்தை சாதாரண ஆயுதங்கள் போல நினைத்தவுடன் எல்லோராலும் கையாளவும்முடியாது. அதற்கு சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் உட்பட அதற்குரிய கருவிகள் அவசியம். இதற்குரிய ஆற்றல் சிரிய இராணுவத்திடம் நிச்சியமாக இருக்கின்றது. அதனால் சிரிய இராணுவம் இந்த தாக்குதல்களை செய்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.  எனினும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஐ.நாவின் இரசாயன பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் இருக்கும் போதே இந்த தாக்குதல் நடந்துள்ளமை அசாத் அரசு தவிர்ந்த வேற யாராவது செய்திருக்ககூடும்  என்ற சந்தேகத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ஏனெனில் ஐ.நாவின் பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் நிற்கும்போது அதுவும் டமாஸ்கஸுக்கு மிக அருகாமையிலேயே தாக்குதல் நடத்தும் அளவுக்கு அசாத் முட்டாளாக இருக்க முடியாது. அப்படி என்றால் வேறு யார் செய்திருக்ககூடும்?
2.       அசாத் சிரிய ஜனாதிபதியாக இருந்தாலும் போர் ஆரம்பித்த பின்னர் அவர் எந்தளவு சிரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அவரின் இராணுவத்தின் முக்கிய பிரிவுகள் அவரின் சகோதரர் மாகிர் அசாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இவர் பசர் அல் அசாத்தை விட கடும்போக்காளர். யுத்தம் மூலமாக போராளிகளை முற்றாக ஒழிக்கலாம் என்று பிடிவாதமாக இருப்பவர். நான் ஏற்கனவே எனது முன்னைய பதிவில் சொன்னதை போல FSA யுடன் சமாதான போச்சுவர்த்தைகளுக்கான சில சமிக்ஜைகள் இருந்ததும் அசாத்தின் சில நெகிழ்வு போக்குகளும் மாகிர் அசாத்துக்கு பிடிக்கவில்லை. ஜனாதிபதி அசாத்துக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்காமல் இருப்பதற்காக ஏனைய கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவ்வாறான ஒரு தாக்குதலை இவர் செய்திருக்ககூடும்.   
3.       போராளிக்குழுக்கள் – இராணுவ சமநிலை அசாத்துக்கு சார்பாக மாறிகொண்டிருக்கும் நிலையில் சர்வதேச தாக்குதல்முனை ஒன்றை திறப்பதன் மூலமாக களச்சமநிலையில் மாற்றம் ஒன்றை அவசரமாக ஏற்படுத்துவதற்காக இவர்கள் செய்திருக்ககூடும் என்ற கருத்தும் இருக்கின்றது.
4.       வெளிநாட்டு உளவு அமைப்புக்கள்- சிரியாவின் வெவ்வேறு பகுதிகளின் கட்டுபாடுகளும் பலரின் கைகளில் இருக்கும் நிலையில் பல வெளிநாட்டு உளவு அமைப்புக்களின் பிரசன்னங்களுக்கும் பஞ்சம் இல்லை. இதில் முக்கியமாக இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் சிரியாவில் பெருமளவில் நிற்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இதுவரை சிரியா நிலப்பரப்பு மொசாட்டுக்கு தடை வலயமாகவே இருந்தது. தற்போது சிரியா  ஒரு திறந்தவெளி சந்தையாக இருப்பதால் அங்குள்ள உட்கட்டுமானங்கள் உட்பட பல தகவல்களுக்காக அவர்கள் பல முகங்களோடு சிரியாவில் நடுமாடும் நிலையில் சர்வதேச தாக்குதல் முனை ஒன்றை திறப்பதற்கான சர்வதேச அபிப்பிராயத்தை  (global opinion) கட்டியெழுப்புவதற்காக அவர்களே இந்த தாக்குதலை செய்திருக்கக்கூடிய சாத்தியங்களும் இல்லாமலிலை.

இந்த கோழைத்தனமான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மற்று கருத்துக்கு இடமில்லை.

இதற்கு மேலதிகமாக தற்போது நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதாவது FSA தவிர்ந்த ஏனைய 14  போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய இராணுவம் (Islamic Army) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இவர்களின் நோக்கம் இஸ்லாமிய கிலாபத்தை தோற்றுவிப்பது என்று பொதுவாக குறிப்பிட்டாலும் அரசியல் ரீதியாக அதனை எவ்வாறு அடையப்போகிறார்கள் என்பது தற்போதைய நிலையில் தெளிவில்லாமல் இருக்கின்றது.

இவர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மறுமுனையில் அரசியல் ரீதியாக சிரியா பிரச்சினைக்கு முற்றிப்புள்ளி வைக்கும் சர்வதேச முனைப்புகளும் ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நவம்பர் மாதத்தில் ஜெனிவாவில் சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.  அசாத் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டாலும், SNC இன்னும் உடன்படவில்லை போல தெரிகின்றது. அசாத் ஆட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவதில்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. சிரிய இராணுவத்தை தோற்கடிக்கும் வலு FSAயிடமிருந்து குறைந்து வரும் நிலையில் இவர்களின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்,    சவுதி அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் பின்னடிக்கிறார்கள் என்பதுவே சர்வதேச அவதானிகளின் கருத்து. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சவூதி அரசாங்கம் தனக்கு முதன் முதலாக கிடைத்த ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கான சுழற்றிமுறையிலான  பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற குண்டை தூக்கி போட்டதை குறிப்பிடலாம். இந்த பதவி தற்செயலாக கிடைத்த ஒன்றல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். அன்றுதொட்டு தமது அதிகாரிகளுக்கு மொழிப்பயிற்சி உட்பட இராஜதந்திர பயிற்சிகள் அனைத்தையும் வழங்கி தயார் நிலையில் இருந்த சவூதி அரசாங்கம், திடீரென பின்வாங்கியமைக்கு முக்கிய காரணம் சிரியாவில் விடயத்தில் தான் முற்றுமுழுதாக நம்பிய அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து சர்வதேச தாக்குதல்களை தள்ளிப்போட்டதும், தற்போது அசாத்தை அகற்றாமல் நழுவல் போக்கை கடைபிடிப்பதே காரணமாகும். பேச வேண்டிய மேடையை (ஐ.நா பாதுகாப்பு சபை) உதறித்தள்ளிவிட்டு தனி ஒரு வல்லரசை மட்டும் நம்பும் சவூதியின் தீர்மானமானது முட்டாள்தனம் என்றால் அது மிகையாகாது. (தேவையேற்பட்டால் இதனை பற்றி வேறு ஒருபதிவில் விரிவாக பார்ப்போம்).

இந்த பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்தம் என்ற பெயரில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை திரைமறைவில் வல்லரசுகள் ஆரம்பித்திருப்பதை போல தெரிகிறது. அதுதான் சிரியாவை இரண்டு நாடுகளாக துண்டாடும் வேலைத்திட்டம்.

வலை விரியும் .....

முன்னைய பதிவுகள் 

சிரியா யார் வலையில் (பாகம் 02)
சிரியா யார் வலையில் (பாகம் 01)


No comments:

Post a Comment