ஜெனிவாவில் நடந்து முடிந்த ஈரானின் அணு
சம்பந்தமான ஒப்பந்தம் பிராந்தியத்தின் வெவ்வேறு நாடுகளிலும் பல்வேறு வகையான ஆதரவு-எதிர்
அலைகளை உருவாக்கியுள்ளது. சில அரபு நாடுகள் நீண்ட மௌனத்தின் பின்னர்
எச்சரிக்கையோடு இந்த ஒப்பந்த்தத்தை வரவேற்றுள்ளபோதும் இஸ்ரேல் மாத்திரம் கடும்தொனியிலான
எதிர்ப்பை காட்டியுள்ளது. “இதுவொன்றும் வரலாற்று ரீதியிலான ஒப்பந்தம் இல்லை, மாறாக
வரலாற்றுத் தவறு (Historical mistake). எனவே இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான தன்னிச்சையாக இராணுவ நடவடிக்கையை
எடுக்கவும் தயங்காது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மிரட்டியிருக்கிறார்.
அவர் குறிப்பிட்டபடி ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேலினால் தற்போது மேற்கொள்ளமுடியுமா?
இஸ்ரேல் ஈரானின் அணு உலைகளை நிர்மூலம்
செய்யவேண்டுமாயின் ஒன்றில் விமானத்தாக்குதல்கள் அல்லது ஏவுகணை தாக்குதல்கள்
மேற்கொள்ளவேண்டும். இதில் இஸ்ரேலின்
ஜெரிக்கோ 3 என்ற ஏவுகணை ஈரானின் இலக்குகளை அடையக்௯டியது. எனினும்
ஈரானின் ஏவுகணை எதிப்பு வலுவும் (Surface
to Air Anti-Missile capability), ஏவுகணைகள் சிறிய துல்லியமான இலக்குகளை 100% அடையமுடியாத தன்மையுடையது என்பதாலும் இஸ்ரேல் விமானத்தாக்குதல்களையே
தேர்ந்தெடுக்கும் சாத்தியம் அதிகம். அவ்வாறு விமானத்தாக்குதல்களை தேர்ந்தெடுக்கும்
போது இஸ்ரேல் எதிர்கொள்ளவேண்டிய சவால்களை பார்ப்போம்.
சவால் 1
இஸ்ரேலில் இருந்து புறப்படும் யுத்தவிமானங்கள்
ஈரானை அடைவதற்கான வழிகள். இதற்கு மூன்று சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.
1. சிரியா மற்றும் ஈராக்கின் வான்பரப்பு ஊடாக செல்லுதல். இஸ்ரேலின்
விமான தொழில்நுட்பங்களோடு ஒப்பிடுகையில் ஈராக்கின் விமான எதிர்ப்புக்கள்
பூச்சியம். எனினும் சிரியாவின் விமான எதிர்ப்புக்கள் ஓரளவு பலம் வாய்ந்தவை.
இதற்கும் மேலதிகமாக இந்த இரு நாடுகளும் தற்போது ஈரானின் நெருங்கிய நட்பு நாடுகள். ஆகக்குறைந்தது
தமது ராடாரில் இஸ்ரேலின் யுத்த விமானங்கள் பறப்பதை அவதானித்த உடனே ஈரானுக்கு தகவல்களை
அனுப்புவதன் மூலம் ஈரானின் விமான எதிப்புகளை உசார்படுத்தலாம் என்பதால் இந்த வழியை
இஸ்ரேல் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.
2. சிரிய- துருக்கி எல்லைகள் ஊடாக செல்லுதல். இதற்கு
துருக்கியின் ஒப்புதல் அவசியம். அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை.
3. சவுதி அரேபியா ஊடான வழி. ஏற்கனவே சவுதியின் ஒப்புதல்
இதற்கு கிடைத்திருந்தாலும் இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. முதலாவது ஏற்கனவே ஒப்புதல்
சம்மந்தமான செய்தியின் பின்னர் சவூதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும்
சலசலப்புகள் காரணமாக இஸ்ரேலின் விமானங்களுக்கு வான்பரப்பு திறக்கப்பட்டால் அது
மிகவும் இரகசியமாகவே பேணப்படல்வேண்டும். இரண்டு, இந்த பாதையூடாக ஈரானின் அணுஉலைகளை
அடைவதற்கு ஈரானின் எல்லைகளை கடந்து நீண்டதூரம்
பயணிக்கவேண்டும்.
![]() |
| இஸ்ரேலிய விமானங்கள் பயணிக்கக்கூடிய பாதைகளின் வரைபடம் |
எவ்வாறு பயணித்தாலும் இஸ்ரேலில் இருந்து புறப்படும் விமானங்கள் ஒருவழியாக(one way) ஆகக்குறைந்தது 1500Km பயணிக்கவேண்டும். மீண்டும் தமது நாட்டை வந்தடைய அவை 3000Km பறந்திருக்க வேண்டும்.
சவால் 2
எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தமது அணு உற்பத்தியை பாதுகாப்பதற்காக ஈரான் தனது அணு உற்பத்தி நிலையங்களை ஒரே இடத்தில் வைக்காமல் பல இடங்களில்
பகுதி பகுதியாக பிரித்து செயல்படுத்துகிறது. இதில் அராக், நதான்ஸ் மற்றும்
இஸ்பஹான் உலைகள் முக்கியமானவை. இஸ்ரேலை பொருத்தமட்டில் தமது விமானத்தாக்குதல்கள் அதிர்ச்சி
தரக்௯டியதாகவும் குறிப்பிட்ட எல்லா உலைகளுக்கும் ஒரே நேரத்தில் பாரியசேதம் விளைவிக்கவேண்டும்
என்றால் இந்த தாக்குதல் திட்டத்திற்கு பல விமானங்களை ஈடுபடுத்தவேண்டும் . ஈரானின் அணுசெறிவாக்கல்
நிலத்துக்கு மிகவும் அடியில் வைத்து பாதுகாக்கப்படுவதால் அதனை தகர்ப்பதற்கு ஆப்கானில்
அமெரிக்கா பயன்படுத்திய GBU- 28 வகை பங்கர் பஸ்டர் (Bunker buster) குண்டுகளே வீசப்படவேண்டும். இதனை கொண்டுசெல்ல F-15i அல்லது F-16i ரகவிமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும். இந்த
குண்டுகளும் விமானங்களும் இஸ்ரேலிடம் போதியளவில் இருந்தாலும், நீண்ட பயணத்தூரத்தை முழுவதுமாகவும்
இடையூறு இன்றியும் இந்த விமானங்கள் அடையவேண்டுமானால் யுத்தவிமானங்களுக்கு
பயணவழியில் எரிபொருள் நிரப்பியாகவேண்டும். இதற்கு tanker எனப்படும் ஆகாயத்தில் வைத்தே எரிபொருள்நிரப்பும்
விமானங்கள் வேண்டும். இந்தரக விமானங்கள் 10 க்கும் குறைவாகவே அவர்களிடம் இருக்கின்றது. இது
இரண்டு அல்லது மூன்று விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மாத்திரமே போதுமானது.
சவால் 3
ஈரானின் விமான எதிர்ப்பு தொழில்நுட்பம் பிராந்தியத்தின்
மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் பலமடங்கு வலுவானது. இதற்காக கடந்த 20 வருடங்களாக பல பில்லியன் டாலர்களை
செலவிட்டிருக்கிறார்கள். சமீபத்திய ரஷ்ய S300 தொழில்நுட்பமும் கிடைத்திருப்பதால் இது இன்னும்
வலுவானதாக மாறியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேலின் விமானங்கள் ஈரானின்
எல்லையில் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். உலகின் எல்லா விமானப்படைகளையும்
விட தமது விமானப்படையின் திறன் மேலானது என்றும் வரலாற்றில் இதுவரை தமது எந்தவொரு
விமானியும் எதிரி நாட்டு எல்லைக்குள் பிடிபட்டது கிடையாது என மார்தட்டும் இஸ்ரேலின் விமானங்கள்
சுடப்பட்டு, விமானிகள் ஈரானின் எல்லையில் பிடிபட்டால்,அது இஸ்ரேல் தமது மக்களுக்குள் கட்டிவைத்திருக்கும்
கனவுத்தேசத்தின் முதல் சரிவாக மாறும். கைது செய்யப்பட்ட இஸ்ரேலின் விமானிகள் உலகம்
முழுக்க இருக்கும் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை சற்று கற்பனை செய்துபாருங்களேன்.
சவால் 4
சர்வதேச நியதிகளின் படி ஒரு நாடு தாக்கப்பட்ட நிலையில் எதிர் தாக்குதல்
செய்வது குற்றமாகாது. ஈரான் தனது கையிருப்பில் உள்ள பல ஆயிரக்கணக்கான பேலஸ்டிக்
ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும் அதேவேளை ஹிஸ்புல்லா மூலமும் தாக்குதல்முனை
ஒன்றையும் திறந்துவிடலாம். இது ஏற்கனவே தட்டுதடுமாறும்
இஸ்ரேலின் பொருளாதாரத்தை நெருக்குவதோடு அரசியல் ரீதியில் நெதன்யாஹு அரசாங்கம்
மக்களின் நெருக்குவாரங்களையும் சம்பாதிக்கலாம்.
ஒருவேளை ஈரான் நேரடியாக எதிர்தாக்குதல்
நடத்தாவிட்டாலும் ௯ட யுரேனியம் செரிவூட்டலின் அளவைக்குறைப்பதற்கு இணங்கிய நிலையில்
தன் மீதான தாக்குதல்கள் தனக்கு சார்பான உலக
அனுதாபத்தையும் எதிர்காலத்தில் அணு ஆயுத உற்பத்தி செய்வதற்கான தமது நியாயப்பாடுகளை
உலக அரங்கில் ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளில் ஈரான் இறங்கலாம்.
எனவே இவ்வாறான சாத்தியப்பாடுகளையும் அதன்
எதிர்விளைவுகளையும் பார்க்கும்போது இஸ்ரேலின் மிரட்டல்கள் வெறும் பூச்சாண்டியே
அன்று வேறில்லை.

No comments:
Post a Comment