Friday, November 22, 2013

மாற்றமடையும் மத்தியகிழக்கு இராஜதந்திர உறவுகள்

நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் என்பது மாற்றமடைய௯டிய ஒன்றாகும். நண்பன் எதிரியானதும் எதிரி நண்பனானதும் உலக சரித்திரத்தில் உதாரணங்கள் ஏராளம். அந்த வகையில் அரபு புரட்சியின் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுவரும் அசாதாரண மாற்றங்கள் சிலருக்கு ஆச்சரியம் தரக்௯டியதாக இருக்கலாம். பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் உள்ள பங்காளர்களின் இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்ப்போம்.


“சவூதி-ஈரான்” என்ற மையப்புள்ளியை சுற்றியே இந்த மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 1979 வரை (ஆயதுல்லா கொமைனியின் ஆரம்பம் வரை) சவுதியும் ஈரானும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் மிகவும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை கொண்ட நாடுகள். இந்த உறவுகள் இராணுவ – பாதுகாப்பு- மற்றும் பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தது. சியா- சுன்னி என்ற மார்க்க ரீதியிலான வேறுபாடுகள் அரசியல் ரீதியில் அனுகப்பட்டிருக்கவில்லை. அன்று அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியனுக்கு எதிராக இரு நாடுகளையும் தமது முதலாளித்துவ தேவைக்காக பாவித்துக்கொண்டன. கொமையினியின் வருகை நிலைமையை தலைகீழாக புரட்டிபோட்டது. கொமைனியின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கை, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலுக்கு காரணமாகியது.  அன்றுதொட்டு கடந்த 4 தசாப்தகாலமாக இருநாடுகளும் எதிர் அணியில் இருப்பது தெரிந்தவிஷயம். எனினும் இந்த இரு நாடுகளும் “இஸ்ரேல் எதிர்ப்பு” என்ற விடயத்தில் மாத்திரம் ஒருமித்த நிலையில் இருந்து வந்தன. யார் பாலஸ்தினுக்கு விடிவு ஏற்படுத்தி கொடுக்கின்றாரோ அவர் முழு முஸ்லிம் உலகத்தினதும் அசைக்கமுடியாத ஹிரோவாக போற்றப்படுவார் என்ற அரசியலும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

எனினும் தற்போது மாற்றமேற்பட்டுவரும் அரசியல் சமன்பாட்டில் பாலஸ்தீனுக்கு  பதிலாக சிரியா பிரதியீடு செய்யப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதானால் பாலஸ்தினின் சுதந்திரம் முஸ்லிம் உலகின் தற்போதைய முக்கிய தேவையல்ல, சிரியாவின் வெற்றியே இன்றைய முக்கிய பிரச்சினை என்ற தோற்றப்பாட்டை சில நாடுகள் வேண்டும் என்றே ஏற்படுத்த முனைவதை காணலாம். அதாவது சியோனிசம் முஸ்லிம்களின் எதிரியல்ல சியாயிசமே எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. அரசியல் ரீதியிலான சிக்கல்களையும் தமது பரிவாரங்களின் சொத்து சுகங்களையும் தற்காத்துக்கொள்வதற்கு மத அல்லது இன சாயம் பூசப்படுவது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கைதானே.

இதன் அடிப்படையில் வளைகுடா (Gulf Cooperation Council) நாடுகள் அதிலும் குறிப்பாக சவூதி அரேபியா இஸ்ரேலுடன் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை வெளிப்படையாகவே ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்கின்றது. ஒபாமா அரசு ரஷ்யாவுடன் இணைந்து சிரியாவின் மீது போர் தொடுக்காதது இஸ்ரேல் சவூதி போன்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த இரு நாடுகளையும் பொறுத்த மட்டில் ஜெனிவாவில் நடைபெறும் ஈரானின் அணு பரம்பல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தது எரியும் நெருப்பில் எண்ணையை வார்த்தது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இங்கு கவனிக்கவேண்டிய விடயம், அமெரிக்காவை பொருத்தமட்டில், எப்போதும் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராக செயல்படாது, செயல்படவும் முடியாது, ஏனெனில் செனட் சபையில் பெரும்பாலான அங்கத்தவர்கள் பலம்பொருந்திய சியோனிச கட்டமைப்பின் பக்கட்டுக்குள் இருக்கிறார்கள். அவர்கள்தான் அமெரிக்காவின் அரச இயந்திரத்தை கையில் வைத்திருக்கிறார்கள். தேவையேற்பட்டால் சமீபத்தில் நடந்ததைபோல அரச இயந்திரத்தை முடக்கி (shut down) விடுவார்கள்.

இங்கு சவுதியின் நிலைதான் பரிதாபம். தனக்கு சார்பாக அமெரிக்க அரச இயந்திரத்திற்குள் பகிரங்கமாக ஆதரவு திரட்டக்௯டிய எந்தவொரு பொறிமுறையும்   இல்லாதநிலையில்,  அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று தனக்கு கிடைத்த ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் பதவியையும் உதறித்தள்ளியது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றது. சவுதியின் குறைவடைந்துவரும் எண்ணை வளத்தைவிட ஈரானில் தேங்கி இருக்கும் எண்ணை மற்றும் கனிய வளங்களே ஈரான் சார்பான தனது கடுமையான நிலைப்பாட்டை அமேரிக்கா தளர்த்துவதற்குரிய முக்கிய காரணம்.  முதலாளித்துவ அமெரிக்காவை பொருத்தமட்டில் அவர்களின் ௯ட்டல் கழித்தல்களில் சரியாகவே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு சியாக்களின் ஈரானோ அல்லது சுன்னிகளின் சவுதியோ முக்கியமல்ல. யாரிடம் சரக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம். சரக்கு தீர்ந்துவிட்டால் கறிவேப்பிலைதான். இதுதான் பாகிஸ்தான்- இந்திய விடயத்தில் பாகிஸ்தானுக்கும்  நடந்தது. ஒரு காலத்தில் ஒரு முஸ்லிம் நாடு வல்லரசாக முடியும் என்றால் அது பாகிஸ்தான்தான் என்ற நிலையில் இருந்த நாட்டை இன்று குப்பை தொட்டியாக மாற்றியிருக்கிறார்கள். அதுவேதான் சதாமுக்கும் நடந்தது. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு நீண்ட காலத்துக்கு தமது ஆட்சியை தொடரமுடியாது என்ற இந்த உண்மை சவூதி ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்போகிறோம் என்று இளவரசர் பந்தர் சுல்தானை அவசரமாக  ரஷ்யாவுக்கு அனுப்பியும் பருப்பு வேகவில்லை. ஏனெனில் ரஷ்யாவோடு ஒரு நிலைக்கு மேல் பாதுகாப்பு ஒப்பந்தம் என்று போனால் கடாபி மற்றும் சத்தாமின் நிலைதான் அப்துல்லாவுக்கும். வேண்டும் என்றால் 30 வருடங்களுக்கு முன் சீனாவிடம் இருந்து வாங்கிய “East Wind” போன்ற ஏவுகணைகளை வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதிக்கும்.அமெரிக்காவை முற்றிலும் பகைத்துக்கொள்ளாமல் அதேநேரம் ஈரானுக்கு சார்பான அமெரிக்க நிலைப்பாட்டுக்கு சிகப்பு கொடியை பிராந்தியத்தில் நிலைநாட்டவேண்டும் என்றால் சவுதிக்கு இருக்கும் ஒரே தெரிவு, இஸ்ரேல்தான். இஸ்ரேலுடன் கைகோர்க்கும் போது தனக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை அமேரிக்கா எடுக்க முடியாது.  அதேவேளை எதிரிக்கு எதிரி நண்பன் என்றவகையில் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும். மேலும் சிரியாவின் விடயத்திலும் இரு நாடுகளும் ஒத்த கருத்தில் இருப்பதால், அது இன்னும் சார்பானதாக மாறும். அதற்கமைய ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு தமது வான்பரப்பையும் தேவையேற்பட்டால் தமது விமான தளங்களையும் இஸ்ரேல் பாவித்துக்கொள்ளலாம் என்ற உடன்பாடும்  எதிர் காலங்களில் இஸ்ரேலின் மொசாட் அமைப்புடன் தமது உளவுபிரிவும் சேர்ந்து இயங்குவதற்குரிய உறுதிமொழியும் சவூதி அரசாங்கம் கொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.  


இந்த போக்கு பிராந்தியத்தில் தொடரும் என்றால் முதலில் காவுகொள்ளப்படப்போவது சவூதி அரேபியர்களோ அல்லது ஈரானியர்களோ இல்லை, பலஸ்தீனியர்களும் அவர்களின் விடிவுக்காக காத்திருக்கும் முஸ்லிம் உலகுமேயாகும்.  

No comments:

Post a Comment